political

மருத்துவ மேல்படிப்பு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக் கல்வியில் சேருவதற்கான “நீட்” நுழைவுத் தேர்வு சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக அரசு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது. கடிதம் எழுதிவிட்டாலே தன் கடமை முடிந்து விட்டது என்று கருதி, முதல்-அமைச்சரும் “நீட்” தேர்வால் தமிழக மாணவர்கள் படும் இன்னல்கள் பற்றி பாராமுகமாக இருக்கிறார்.

அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வியால் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாவிற்கு இதுவரை அதிமுக அரசால் சட்ட அந்தஸ்தை பெற முடியவில்லை.

தமிழக சட்டமன்ற மசோதாவிற்கு உரிய அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவில்லை என்பதால் மருத்துவ மேற்படிப்பில் சேர வேண்டிய அரசு மருத்துவர்கள் இன்றைக்கு வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளில் அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பறிபோயிருக்கிறது. ஆரம்பம் முதலாகவே “நீட்” தேர்வு வி‌ஷயத்தில் இந்த அரசு அலட்சிய மனப்பான் மையுடனேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப் போது மருத்துவ மேற்படிப்பு தொடர்பான வழக்கிலும் உயர்நீதிமன்றத்தில் அதிமுக அரசு அக்கறையில்லாமல் செயல்பட்டு, தலைவர் கலைஞர் அரசு மருத்துவர்களுக்கு அளித்த இடஒதுக்கீட்டு உரிமையை இழந்து விட்டு நிற்கிறது.

கடந்த 17-ந்தேதி அன்று சென்னை உயர் நீதிமன்றம், “இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பிற்கு அனுமதிக்க வேண்டும்” என்று அளித்துள்ள தீர்ப்பால் இன்றைக்கு பல்வேறு பிரிவுகளில் மருத்துவ மேற்படிப்பிற்கான 1225 இடங்களில் சேருவதற்கான வாய்ப்பு கிராமப்புறங்களிலும், மலை கிராமங்களிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உருவாகி விட்டது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அதிமுக அரசு குறித்த காலத்தில் பெற்றிருந்தால் இப்படியொரு அவல நிலைமை ஏற்பட்டிருக்காது.

இதனால் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கும் பேராபத்து உருவாகியிருக்கிறது. இது கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக அயராது பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் கிராமப்புற மருத்துவமனைகளை அரசு மருத்துவர்கள் விரும்பாத ஒரு நிலையை ஏற்படுத்தி விடும்.

அனைவருக்கும் தரமான சிகிச்சையை உறுதி செய்ய வேண்டிய அரசே இப்படி அலட்சிய மனப்பான்மையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் செயல்பட்டு, அரசு மருத்துவர்களின் நலனைக் காக்கத் தவறி, அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் முழுப்பயனும் சென்றடையாத வண்ணம் செய்து விட்டது.

ஆகவே அ.தி.மு.க. அரசு உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களை சேர்க்கவும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகள் இதில் மிக முக்கியம் என்பதால் அரசு மருத்துவர்களின் போராட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அதிமுக அரசு அதி வேகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

About the author

Julier