News

ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பு: கூடுதல் ராணுவம் இன்று வருகை

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக துணை ராணுவப் படையினர் இன்று வருகை தர உள்ளனர் என்று போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா கூறினார்.

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது.

வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. அங்கு அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. தி.மு.க. சார்பில் டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் முறைகேடுகளை தடுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் கமி‌ஷனர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை 20 பேரை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமி‌ஷனருமான கார்த்திகேயன், இடைத்தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் வைத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் ஏற்பாடு குறித்து மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா ஆகியோர் விளக்கி கூறினார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை அமைதியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 வாக்குச்சாவடி பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதுபோன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பறக்கும்படையினர் தொகுதி முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். விளக்குகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து இடம் மாறி சென்றவர்களின் ஓட்டுகளை போடுவதற்கு யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டு பதிவின் போது 4 வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேசிய மற்றும் மாநில கட்சிகளின் அடிப்படையிலும், அகர வரிசைப்படியும் வேட்பாளர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருக்கும். வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவித முறைகேடும் செய்ய முடியாது. இணைய தளம் மூலமாக அது நேரடியாக ஒளி பரப்பு செய்யப்படும்.

வாக்காளர்களுக்கு இன்று முதல் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக 100 சதவீதம் பூத் சிலிப்புகள் தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் மத்திய அரசு ஊழியர் ஒருவர் நியமிக்கப்படுவர்.

இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

பின்னர் போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா கூறியதாவது:-

தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக துணை ராணுவப் படையினர் இன்று வருகை தர உள்ளனர். 1,694 பேர் வருகை தர இருக்கிறார்கள். சோதனை சாவடிகள் மூலமாக போலீசார் பலத்த சோதனை நடத்தி வருகிறார்கள். பரிசு பொருட்கள் வினியோகித்தவர்கள் மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப்பிரிவுகளிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 145 புகார்கள் வந்துள்ளன. அதில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் கட்சியினர் தொடங்கியுள்ள தேர்தல் அலுவலகங்கள் அருகில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அல்லது நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட உள்ளது. குஜராத்தில் இருந்து மேலும் ஒரு தேர்தல் பார்வையாளர் மனோஜ் அகர்வால் நாளை வருகிறார்.

இவ்வாறு கரன்சின்கா தெரிவித்தார்.

இதன் பின்னர் மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா ஆகியோர் தண்டையார்பேட்டை இளைய தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கார்த்திகேயன் வீடு வீடாக சென்று பூத் சிலிப்களையும் வழங்கினார்.