கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் கோடீஸ்வரராக திகழ்ந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் பி.ராமலிங்க ராஜு, இப்போது சிறையில் தினசரி ரூ.50 சம்பளத்துக்கு வேலை செய்ய உள்ளார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன வரவு-செலவு கணக்கில் ரூ.7,000 கோடிக்கு முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், பி.ராமலிங்க ராஜு (60), அவரது 2 சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, ராஜு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். அவரது கைதி அடையாள எண் 4148. சிறையில் ராஜுவை தனிமைப் படுத்தி அவரது நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஏற்கெனவே சிறையில் இருந்துள்ளதால் எவ்வித மன அழுத்தமும் இன்றி வழக்கம்போல அவர் இருப்பதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
15 நாட்களுக்குப் பிறகு இவருக்கு பொருத்தமான வேலையைத் தருவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். நூலக பராமரிப்பு, கைதிகளுக்கு கல்வி கற்பித்தல், கம்ப்யூட்டர் கல்வி கற்பித்தல் ஆகிய மூன்றில் ஏதாவது ஒரு பணி வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதற்காக தினசரி கூலியாக ரூ.50 வழங்கப்படும்.
அவர் சம்பாதிக்கும் இந்தப் பணத்தை முழுவதும் செலவிட அனுமதி இல்லை. ரூ.25-க்கு சிறை உணவகத்திலிருந்து பிஸ்கட், ரொட்டி, தண்ணீர் பாட்டில், சோப்பு, பேஸ்ட் வாங்கிக் கொள்ளலாம். மீதித் தொகை அவரது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதில் செலுத்தப்படும். தண்டனை காலம் முடிந்ததும் அந்தத் தொகை அவரிடம் வழங்கப்படும்.