விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பாதிக்கப்படாத வண்ணம் நிலத்தை கையகப்படுத்த புதிய கட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜெர்மனியில், ஹன்னோவர் கண்காட்சியை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பாதிக்கப்படாத வண்ணம் நிலத்தை கையகப்படுத்த புதிய கட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருகிறது” என்றார்.
அரசு என்ன மாதிரியான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது என்பதை விவரிக்காவிட்டாலும், இந்தியாவில் முதலீடு செய்யும்போது நிலம் கையகப்படுத்துதல் பிரச்சினையாக இருக்காது என்ற நம்பிக்கையை சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் விதைக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
நிலம் கையகப்படுத்தல் அவசர சட்டம் மற்றும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை அரசு சந்தித்து வரும் நிலையில், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை பாதிக்காத வகையில் நிலம் கையகப்படுத்தலுக்கு புதிய கட்டமைப்பை அரசு ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என்று முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான ஒப்புதல் நடைமுறைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருவதாகவும். வெளிப்படைத் தன்மையாலும், துரிதமான நடவடிக்கைகளாலு, வெகு காலமாக தேங்கிக் கிடந்த பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது என பேசினார்