காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு மிக குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க இயலாது என்று மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு இதுவரை ரூ.1,685 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக ரூ.450 கோடியும், 2-வது கட்டமாக ரூ.1,235 கோடியும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 2-வது கட்டமாக ஒதுக்கிய நிதி இன்னும் மாநில அரசுக்கு வந்து சேரவில்லை.
மத்திய அரசு முதல் கட்டமாக வழங்கிய ரூ.450 கோடி உள்பட மாநில அரசின் பங்கு ரூ.671 கோடியை கோடியை சேர்த்து 1.21 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கி உள்ளோம். இன்னும் 10 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி உள்ளது. மத்திய அரசு 2-வது கட்டமாக ஒதுக்கிய நிதி வந்தவுடன், மீதமுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
விவசாயிகளின் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கலபுரகி பகுதியில் இந்த ஆண்டு 71 லட்சம் குவிண்டால் துவரம் பருப்பு விளைச்சல் ஆகியுள்ளது. இதை கொள்முதல் செய்யுமாறு கோரி 1 லட்சத்து 63 ஆயிரம் விவசாயிகள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதுவரை 21 லட்சம் குவிண்டால் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 147 கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரத்து 550 விலையை நிர்ணயம் செய்துள்ளது. இத்துடன் மாநில அரசு ரூ.450 சேர்த்து வழங்குகிறது. வருகிற 15-ந் தேதி வரை துவரம் பருப்பை கொள்முதல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை மே மாதம் இறுதி வரை விஸ்தரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு மிக குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரிநீர் திறக்க இயலாது. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கூறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.