ஆலந்தூர்:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறிப்பிட்ட தேதிக்குள் நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது. தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சி, தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இல்லை.
அதை மாநில தேர்தல் ஆணையம் மூலமாக நீதி மன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள். நீதிமன்றம் அதை கண்டித்திருக்கிறது. தேர்தலை நடத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று சொல்லி உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் பல்வேறு பரிசுகளை கொடுப்பதாக புகார்கள் வந்துள்ளன.
தி.மு.க. சார்பாக நாங்கள் சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தோம். அதை ஏற்று அதிகாரிகளை மாற்றி உள்ளனர்.
தற்போது தேர்தல் ஆணையம் அனைத்து அதிகாரிகளையும் மாற்றி இருப்பது வரவேற்கப்பட வேண்டியது. இது தேர்தல் முடியும் வரை தொடர வேண்டும்.
விவசாயிகளின் பிரச்சினைகளை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசின் விவசாயத் துறை அமைச்சரோ, அல்லது பிரதமரோ விவசாயிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று விவசாயிகளையும், பிரதமரையும் சந்தித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில், பொதுவாக தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் இதற்கு நிச்சயமாக, உறுதியாக தீர்வு காண வாய்ப்பு கிடையாது.
ஏனென்றால் அவர்கள் 2 அணிகளாக பிரிந்து தங்கள் பதவியை தக்க வைப்பதில்தான் குறியாக உள்ளனர். நாட்டையும், நாட்டு மக்களை பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.