சென்னை:
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக அரசியல் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக தேர்தல் கமிஷனிலும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கடந்த வாரம் மத்திய துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாக அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி நேற்று டெல்லியில் இருந்தவாறு தமிழக அரசு அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதில் தமிழக அரசு சார்பில் தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் கரன் சின்கா, மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோருடன் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு டைரக்டர் ஜெனரல் கே.முரளிகுமாரும் கலந்து கொண்டார்.
இந்த ஆலோசனையின் போது பணப்பட்டுவாடாவை தடுக்க அது தொடர்பான புகாரின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் சோதனை நடத்தவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி உத்தரவிட்டார். அதன்பேரில் வருமானவரித்துறையும் தனியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இது பற்றி வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின்பு ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 7 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் நாங்கள் தனியாக கட்டுப்பாட்டு அறை திறந்துள்ளோம். மாநில போலீசாருடனோ, தேர்தல் அதிகாரிகளுடனோ தொடர்பு இல்லாமல் தனியாக செயல்பட்டு வருகிறோம்.
பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை 18004256669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.