political

ராணுவ ஜீப்பில் இளைஞர் கட்டி வைக்கப்பட்ட விவகாரத்தில் ராணுவத்திற்கு ஆதரவாக நிற்க அரசு முடிவு

காஷ்மீரில் ராணுவ ஜீப்பில் இளைஞர் கட்டி வைக்கப்பட்ட விவகாரத்தில் ராணுவத்திற்கு ஆதரவாக நிற்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த வீடியோ காட்சி  சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. பாதிக்கப்பட்ட நபர் தான் வாக்குப்பதிவு செய்துவிட்டு தங்கை வீட்டை நோக்கி சென்றபோது பிடித்து கட்டிவைத்தனர் என்றார். ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 இது தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி வரும் நிலையில் காஷ்மீர் போலீசும் வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதற்கிடையே காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இருதரப்பு இடையேயும் வெளியாகும் வீடியோக்கள் அதிர்ச்சி நிறைந்தவையாக உள்ளன. இவ்விவகாரம் அரசியல் கட்சியினரின் விமர்சனங்களை தாங்கிவரும் நிலையில் ராணுவ ஜீப்பில் இளைஞர் கட்டி வைக்கப்பட்ட விவகாரத்தில் ராணுவத்திற்கு ஆதரவாக நிற்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
ஒருதவிர்க்க முடியாத சூழ்நிலையில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய முடிவுக்கு அரசு பாராட்டை தெரிவித்து உள்ளது. ராணுவ கமாண்டர்களை சந்திக்கும் போது பாதுகாப்பு துறை மந்திரி அருண் ஜெட்லி இவ்விவகாரம் தொடர்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் ராணுவம் அரசியலுக்காக குறிவைக்கப்படுகிறது என பார்க்கிறது. மத்திய பிரதம அலுவலக இணை அமைச்சர் உதாம்பூர் எம்.பி. ஜிஜேந்திர சிங் ஜம்மு காஷ்மீர் பத்திரிக்கைக்கு அளித்து உள்ள பேட்டியில் காஷ்மீரில் மன்னிக்கப்பட்ட தலைவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார்கள். இவர்கள் ராணுவத்திற்கு எதிராக அவதூறுகளை பரப்ப அவர்களுடைய தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள் என்று சாடிஉள்ளார்.