Flash World

டிரைவர் இல்லாமல் 26 கி.மீ. ஓடிய ரெயில் பயணிகள் உயிர் தப்பினர்

வங்காளதேசத்தில் டிரைவர் இல்லாமல் 26 கிலோ மீட்டர் ரெயில் பயணம் செய்து உள்ளது.

அதிசயம், ஆனால் உண்மை என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு சம்பவம், வங்காளதேசத்தில் நேற்று நடந்துள்ளது. அங்கு பரித்பூர் செல்ல வேண்டிய ரெயில், ராஜ்பாரி ரெயில் நிலையத்தில் 6–வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தது. 6 பெட்டிகளை கொண்ட அந்த ரெயிலில் 23 பயணிகள் இருந்தனர். அந்த ரெயிலின் என்ஜின் டிரைவர், டீ குடிப்பதற்காக இறங்கியவர், மீண்டும் ஏறவில்லை. ரெயிலில் ரெயில் கார்டும் (காவல் பணியாளர்) இல்லை. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த ரெயிலின் தானியங்கி ‘கியர்’ இயங்கி, ரெயில் பின்னோக்கி ஓடத்தொடங்கியது. இப்படி 26 கி.மீ. தொலைவுக்கு ரெயில் ஓடி விட்டது.

இதற்கிடையே ரெயில் டிரைவர் இன்றி ஓடிக்கொண்டிருப்பதை அதிகாரிகள் உணர்ந்து துரித கதியில் செயல்பட்டனர். ரெயில்வே அதிகாரிகளுக்குள் தகவல் பரிமாறப்பட்டது. அதைத் தொடர்ந்து பாபுபஜார் என்ற இடத்தில் ரெயில் பெட்டிகள் இடையேயான ‘வேகுவம் பிரேக் பைப்’ கருவியை விடுவித்து அன்வர் உசேன் என்ற டிக்கெட் கலெக்டர் ரெயிலை நிறுத்தி புண்ணியம் கட்டிக்கொண்டார். நல்ல வேளையாக விபத்து எதுவும் நேரவில்லை. பயணிகளும் தப்பினர். இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.