World

இந்திய ஐ.டி. நிறுவனங்கள் ‘எச்1பி’ விசாவில் முறைகேடு: அமெரிக்கா புகார்

 வாஷிங்டன்:

அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினருக்கு ‘எச்-1பி விசா’ வழங்கப்படுகிறது. அதன் மூலம் இந்தியாவை சேர்ந்த ஏராளமான என்ஜினீயர்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிகின்றனர்.

தற்போது, புதிய அதிபராக பொறுப்பெற்றிருக்கும் டொனால்டு டிரம்ப், ‘எச்-1பி’ விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பு அரிதாகி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள் எச்1பி விசா மூலம் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் செய்துள்ளதாக அமெரிக்கா புகார் கூறியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தனது இணையதளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ் மற்றும் காக்னிசன்ட் போன்றவை அதிக அளவில் எச்1பி விசாவுக்கு விண்ணப்பித்து அளவுக்கு அதிகமாக பெற்றுள்ளன. அவற்றை லாட்டரி குலுக்கல் போன்று பலருக்கு வழங்கி பணி அமர்த்தியுள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி அந்நாட்டு நிதி மந்திரி ஸ்டீவன் முன்சினாசை சந்தித்தார். அப்போது எச்-1 பி விசா கட்டுப்பாடு குறித்த பேசினார்.

விசா கட்டுப்பாட்டினால் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஐ.டி. நிறுவனங்களின் பங்கையும் எடுத்துரைத்தார். எனவே எச்-1 பி விசா கட்டுபாட்டை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.