பிரதமர் நரேந்திரமோடி அடுத்த மாதம் (மே) இலங்கை செல்கிறார். அங்கு நடைபெறும் சர்வதேச புத்த மாநாட்டில் பங்கேற்கிறார்.

அப்போது இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்து பேசுகிறார். இந்திய அரசு சார்பில் திரிகோணமலை துறைமுகம் திட்டம் கட்டித்தரும் திட்டம் நிலுவையில் உள்ளது.
மற்றும் இந்தியா-இலங்கை இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் இழுபறியில் உள்ளது. மோடி இலங்கை பயணத்தின் போது இப்பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இலங்கை செல்வதற்கு முன்பு அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வருகிற 25-ந்தேதி டெல்லி வருகிறார். அப்போது வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை சந்திக்கிறார்.
இவர்களுடன் ஆன சந்திப்பின்போது இலங்கையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து ரனில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி கட்ட போரின் போது பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. அங்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு 2015-ம் ஆண்டு முதன்முறையாக இலங்கை சென்றார். வடகிழக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை தலைநகர் கொழும்புடன் இணைக்கும் ரெயில்பாதையை தொடங்கி வைத்தார். தற்போது 2-வது தடவை அவர் இலங்கை செல்ல இருக்கிறார்.










