அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது: மோடி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். 2016-17ம் ஆண்டில் மட்டும் புதிதாக 1 கோடி பேர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் இணைந்துள்ளனர். அப்படியென்றால், இந்த ஓராண்டில் மட்டும் புதிதாக 1 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை நிலவிவருவதாக பொய்ப்பிரசாரம் செய்கின்றனர். ராகுல் போன்றோருக்கு தான் இந்த மோடி ஆட்சியில் வேலையில்லை. முத்ரா யோஜ்னா திட்டத்தின் மூலம் 7 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். திறன்மிகுந்த இளைஞர்களுக்கு அப்ரன்டீஸ் பயிற்சி தரும்பொருட்டு, நேஷனல் கேரியர் போர்டல் துவக்கப்பட்டுள்ளது. அதிக வேலைவாய்ப்பு உருவாக்கித்தந்த மாநிலங்களை கவுரவிக்கும் வகையிலான விருதுகளை குஜராத் அரசு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடமிருந்து 9 முறை பெற்றுள்ளது.
காங்கிரஸ் மீ்ண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருட்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி கொண்டுவரப்படும் என்று ராகுல் உறுதியளித்துள்ளார். மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று மோடி தலைமையிலான நிர்வாகம், பெரும்பாலான மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு 5 முதல் 12 சதவீதம் வரையே ஜி.எஸ்.டி. வரியாக நிர்ணயித்துள்ளது. ஆனால், ராகுல் சொல்லும்படி பார்த்தால், அனைத்து பொருட்களுக்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இவ்வாறு ஜவடேகர் கூறினார்.