World

உலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பரில் இந்தியா வருகை

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பர் 1ம் தேதி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள ஒபாமா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இந்தியத் தலைவர்களுடன் கலந்து கொள்ள உள்ளதாக பராக் ஒபாமா அவரது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை தகுதிமிக்க குடிமக்களாக மாற்றுவதற்காக தமது அமைப்பு பாடுபடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் மூலம், ஒரு குடிமகனாக இருக்க வேண்டும் என்பதற்கான தாக்கத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில் உரையாடல்கள் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், உலகில் மிகவும் கலாச்சார ரீதியாகவும், மத ரீதியாகவும், மொழியியல் ரீதியாகவும், இன ரீதியாகவும், பல்வேறுபட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா, ஒருங்கிணைந்த வலிமையைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க ஒபாமா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்தோனேசியா, ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னததாக கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று நாள் பயணமாக ஓபாமா தனது மனைவி மிச்செலுடன் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.