சிட்னி: உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது.சிட்னியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்றதையடுத்து, அந்த அணி தென்ஆப்ரிக்க அணியை பீல்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. பெரைராவும், தில்சனும் இலங்கையின் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
ஆனால் இலங்கை அணி 3 ரன்களை எடுப்பதற்கு முதல் விக்கெட்டை இழந்தது. குஷால் பெரைரா, அபாட் பந்தில் கீப்பர் டி காக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து குமார சங்கக்காரா, தில்சனுடன் இணைந்தார். அடுத்து தில்சன் டக் அவுட் ஆனார். தில்சன் விக்கெட்டை ஸ்டெயின் வீழ்த்தினார். இலங்கை அணி 4 ஓவரில் 4 ரன்களை எடுத்தது. அடுத்து திரிமன்ணே, சங்கக்காராவுடன் இணைந்தார்.
அடுத்து திரிமன்ணே சங்கக்காராவுடன் இணைந்தார். இந்த ஜோடியும் நிலைத்து ஆடவில்லை. 41 ரன்கள் எடுத்த நிலையில் திரிமன்ணே தாகிர் பந்தில் அவரிடமே பிடிகொடுத்தார். தொடர்ந்து மகிலா ஜெயவர்த்தனே களமிறங்கினார். இவரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து தாகிர் பந்தில் டுப்லெசசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இலங்கை அணி 85 ரன்களை எட்டுவதற்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற கேப்டன் ஏஞ்சலா மேத்யூசாவது சங்கக்காராவுக்கு பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்த்தால் அவரும் 19 ரன்னில் டுமினி பந்தில் பலியானார். தொடர்ந்து திசே பெரைரா டக்அவுட்,குலசேகரா ஒரு ரன், குஷால் டக் அவுட் என இலங்கை வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.
விக்கெட்டுகள் போய்க் கொண்டிருந்தாலும் மறுமுனையில் சங்கக்காரா மட்டும் போராடிக் கொண்டிருந்தார். காலிறுதி போன்ற முக்கியமானதொரு ஆட்டத்தில், இலங்கை பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடாதது இலங்கை அணி பேட்டிங்கில் சரிவை சந்திக்க காரணமாக இருந்தது.
மைதானத்தில் போராடிக் கொண்டிருந்த சங்கக்காராவும் 94 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மோர்கல் பந்தில் மில்லரிடம் பிடி கொடுத்து சங்கக்காரா வெளியேறினார். இலங்கை அணி 127 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்த சமயத்தில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மழைக்கு பின் இலங்கை அணி மேற்கொண்டு 6 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 37.2 ஓவரில் 133 ரன்களை மட்டுமே இலங்கை அணி எடுத்தது. தென்ஆப்ரிக்க தரப்பில் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும் டுமினி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து தென்ஆப்ரிக்க அணி பேட் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஆம்லா,டி காக் நிதானமாக ஆடினர். ஆம்லா 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து டுப்லெசிஸ் டி காக்குடன் இணைந்தார். இந்த ஜோடி தென்ஆப்ரிக்க அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.
தென்ஆப்ரிக்க அணி 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. டி காக் 78 ரன்களும் டுப்லெசிஸ் 21 ரன்களும் எடுத்தனர். உலகக் கோப்பை போட்டியில் இதுவரை 6 முறை நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள தென்ஆப்ரிக்க அணி இந்த முறைதான் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது.